திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும், 21ம் தேதி, சூரிய கிரகணம் அன்று, பக்தர்களுக்கு தரிசனம் ரத்து..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. மத்திய அரசின் சில தளர்வுகள் காரணமாக 8ந்தேதி முதல் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியது. ஆந்திர அரசும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் 10-ந்தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.11-ந்தேதி தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டர்கள்.

இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில், வரும், 21ம் தேதி, சூரிய கிரகணம் அன்று, பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.ஜூன், 21ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை, 10:18 மணி முதல் மதியம், 1:38 மணி வரை, சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஆகம விதிப்படி, கிரகண காலத்திற்கு, ஆறு மணி நேரத்திற்கு முன், ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம்.

இதன்படி, ஜூன், 20ம் தேதி இரவு, ஏகாந்த சேவைக்கு பின் சாற்றப்படும் நடை, சூரிய கிரகணம் முடிந்து, மறுநாள் மதியம், 2.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது.நடை திறக்கப்பட்டதும், கோவில் சுத்தம் செய்யப்பட்டு, சுத்தி, புண்ணியாவசனம் உள்ளிட்டவை நடக்க உள்ளது. அதன்பின் சுப்ரபாத சேவை, நைவேத்தியம் உள்ளிட்ட கைங்கரியங்கள் தொடருவதால், அன்று முழுதும், கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.தனிமையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ஜித சேவைகளும், அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன், 20க்கு பின், 22ம் தேதி மட்டுமே, பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது