அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி ருத்ராபிஷேக பூஜையுடன் துவங்கியது

Scroll Down To Discover
Spread the love

உத்தர பிரதேசத்தில் அயோத்தியின், சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது.இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், 15 உறுப்பினர்கள் அடங்கிய அறக்கட்டளை ஒன்றை, மத்திய அரசு பிப்ரவரியில் அமைத்தது.இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, மார்ச்சில் நடந்தது.

ஆனால், கொரோனா பரவலால், பணிகளை தொடர முடியாமல் போனது. இரு மாதங்கள் கழிந்த நிலையில், கடந்த மாதம், 11ல், மண் தோண்டும் பணிகள் துவங்கின. அப்போது, 5 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமி இடத்தில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கியது. முதலில், காலையில், ருத்ராபிஷேம் என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது.ராமஜென்மபூமியில் உள்ள குபேர் திலா என்ற பழங்கால சிவன் கோவிலில் இந்த சடங்குகள் நடந்தன. அறக்கட்டளையை சேர்ந்த மகந்த் கமல் நயன்தாஸ் தலைமையிலான சாதுக்களும், துறவிகளும் பங்கேற்றனர்.கருப்பு பசுவின் 11 லிட்டர் பால், சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டது. எவ்வித இடையூறும் இல்லாமல் கட்டுமான பணி நடக்க வேண்டும் என்று துறவிகள் வேண்டிக்கொண்டனர்.பின்னர், கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் அடையாளமாக முதல் செங்கல் எடுத்து வைத்து கட்டுமான பணி தொடங்கியது.
https://twitter.com/Shivani2297/status/1270633163413479424?s=20
இதுகுறித்து மகந்த் கமல் நயன்தாஸ் கூறுகையில், “எந்த ஆன்மிக காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், சிவனை வழிபடுவது ராமரின் வழக்கம். அதையே நாங்களும் பின்பற்றி உள்ளோம்“ என்றார்.ராமஜென்ம பூமியில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சி இதுவே ஆகும்.இந்த விழா, பிரதமர் மோடி பங்கேற்க பிரமாண்டமாக நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டுள்ளது.