நேபாள எல்லையில் மாடு கடத்தும் கும்பலால் கொல்லப்பட்ட குமரி ராணுவ வீரர் – 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு வீரவிளையை சேர்ந்தவர் பங்கிராஜ், விவசாயி மகன் மணிகண்டன் (வயது 28) இவர் 2014-ம் ஆண்டு மத்திய துணை ராணுவ படையில் பணியில் சேர்ந்தார்.

கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி மணிகண்டன் உள்பட 3 வீரர்கள் பீகார், இந்திய நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள கக்காட்டியா சோதனைச்சாவடியில் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்.சோதனையின்போது வாகனத்தில் சட்ட விரோதமாக மாடுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க மணிகண்டன் முயன்றபோது, மாடு கடத்தல் கும்பல் பயங்கர ஆயுதங்களால் மணிகண்டனையும், மற்ற வீரர்களையும் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சிலிகுரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் மணிகண்டன், சிகிச்சை பலனின்றி ஜூன் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து மணிகண்டன் உடல் திருவனந்தபுரம் வழியாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவர் சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்க அறிவிக்கப்பட்டது.நேற்று காலையில் ராணுவ வீரரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக உடலை மூடியிருந்த தேசிய கொடியை ராணுவ வீரர்கள் அகற்றி மணிகண்டனின் தந்தை பங்கிராஜிடம் கொடுத்தனர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஸ் சாஸ்திரி, இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , பிரின்ஸ் எம்.எல்.ஏ. கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவகுமார், குமரி ப.ராமேஷ் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.மணிகண்டன் பிரிவை ஏற்க முடியாமல் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.