25-ந்தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்குகிறது : மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Scroll Down To Discover
Spread the love

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சரக்கு விமான சேவைகளை தவிர்த்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் மார்ச் 25ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘ஏர் இந்தியா’ விமானங்கள் மே 7 – 15ம் தேதி வரை பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு அங்கு தவித்த தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை அறவே நிறுத்தப்பட்டது. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன. இதைப்போல மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்வதற்காகவும் சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து அதற்கு முன்பே, அதாவது வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.


இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “உள்நாட்டு சிவில் விமான போக்குவரத்து 25-ந்தேதி முதல் உரிய அளவீட்டு முறையில் மீண்டும் தொடங்கும். அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் அதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான இயக்கத்துக்கான நடைமுறைகள் தனித்தனியாக வழங்கப்படும்” என்று கூறி உள்ளார்