ஆன்மீக பக்தி….!

Scroll Down To Discover
Spread the love

அன்பின் மறு வடிவமே பக்தியாகும். அன்பு இல்லாமல் பக்தி உதயமாகாது. ஆதி காலம் தொட்டு ஜமின்தார்கள், மிராசுதார்கள், நிலக்கிழார்கள் என்று பொருளாதாரத்தில் மிக சிறப்புற்று வாழ்ந்தார்கள். அவர்களை நம்பி பல கிராம மக்கள் வாழ்ந்தார்கள். மக்கள்  அவர்கள் உதவியை நம்பி வாழ வேண்டி அவர்களிடத்தில் அன்பு செலுத்தினார்கள். அந்த அன்பு  அவர்களின் உதவியை நினைத்து பெரும் மதிப்பு வைத்தனர். அதுவே அவர் மீது அவர்கள் கொண்டாட பக்தியாக விளங்கியது.

இறைவனிடம் ஒருவனுக்கு அன்பு இல்லாமல் பக்தி பிறக்காது. இறைவனிடம்  முதலில் தோன்றும் பக்தி பயபக்தியாகும். இது பெரியோர்களால் சிறியவர்களை  இறைவனிடம்  அன்பு செலுத்தும் வகையில் இறைவன் தன்மையை கூறி பயத்தை  உண்டாக்கி  அதன் வாயிலாக ஏற்படும் பக்தி பயபக்தி.

பின்னர் அதுவே நாளடைவில் தன் அறிவு ஆற்றலால் நூல் பல கற்று, இறைவன் தன்மை உணர்ந்து, தெளிந்து இறைவன் மீது செலுத்தும் அன்பு ஞான பக்தியாகும். மேலும் தன்நிலை உயர்ந்து பிறப்பு, இறப்பு என்னும் உலக இயல்புகளை அறிந்து இறவா வரம் வேண்டி இறைவனிடம்  செலுத்தும் பக்தி மோட்ச பக்தியாகும். இறைவன் பக்தர்களிடம் செலுத்தும்/ காட்டும் பக்தி திருவிளையாடல். தற்போதைய மக்களால் செலுத்தும் பக்தி மூன்று வகையாகும்.

தாமஸபக்தி (பிறர் போற்ற செய்யும் செயல்) : பிறர் வருந்தும் படியாகவும், ஆடம்பரமாகவும், ஆச்சரியப்படும்படியாகவும், பிறர் குரோதத்திற்காகவும் இறைவனிடம் செய்யும் பக்தி.(பயனற்றது)

ராஜஸபக்தி (தனக்குதானே செலுத்தும் பக்தி) : பிறருக்கு துன்பம் இல்லாமல், தனக்கு மட்டும் நன்மை கருதியும் புண்ணியத்தை மட்டும் கருதியும் பேத புத்தியினால் சுயநலம் கருதி செய்யும் பக்தி.

சாத்வீக பக்தி (தன்னிலை மறந்து செலுத்தும் பக்தி) : பாவ நிவர்த்தி பொறுத்து, எல்லாக் கருமங்களையும் ஈஸ்வர அர்ப்பணமாக செய்தல். நித்திய பக்தியுடன் தெய்வத்தினிடம் பிரீதி உடையவராக இருத்தல். நீங்காத பக்தியுடன் என்றும் ஒரு  முகமாக இருத்தல். (அடியார்கள்)