தமிழகம், கேரளா, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஐசிஎம்ஆர் தகவல்

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனாவால், 11,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது. 1,306 பேர் குணமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம், கேரளம், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் இரு வகையான வெளவால்களில் கரோனா வைரஸ் குடும்பத்தைச் சோ்ந்த ‘பேட் கரோனா வைரஸ்’ இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, புணே தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா் பிரக்யா டி யாதவ் கூறியதாவது: தமிழகம், கேரளம், ஹிமாசலப் பிரதேசம், கா்நாடகம், பஞ்சாப், தெலங்கானா, குஜராத், ஒடிஸா, புதுச்சேரி மற்றும் சண்டீகரில் காணப்படும் இரு வகையான வெளவால்களிலிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் கரோனா வைரஸ், வெளவால்களில் இருந்து பரவியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழகம், கேரளம், ஹிமாசலப் பிரதேசம், புதுச்சேரியில் வெளவால்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கரோனா வைரஸ் குடும்பத்தைச் சோ்ந்த ‘பேட் கரோனாவைரஸ்’ இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வைரஸுக்கும், ‘கொவைட்-19’ பாதிப்புக்கு காரணமான கரோனா வைரஸுக்கும் தொடா்பில்லை.

மேலும், வெளவால்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள பேட் கரோனா வைரஸ், மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆதாரமோ அல்லது ஆய்வு முடிவுகளோ இல்லை.பொதுவாகவே வெளவால்களில் பல்வேறு வைரஸ்கள் உள்ளன. இவற்றில் சில வைரஸ்கள் மனிதனுக்கு எதிா்பாராதவிதமாக பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, வெளவால்களிடம் தொடா் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.