வெளிநாடு தப்பியோட முயற்சி : யெஸ் வங்கி ராணா கபூரின் மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்..!!!

Scroll Down To Discover
Spread the love

யெஸ் வங்கியிடம் கடன் வாங்கிய பல்வேறு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்ததால், அவை வாராக்கடனாக மாறியுள்ளன. இதனால், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிா்வாகத்தை ரிசா்வ் வங்கி கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

யெஸ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கிய பெரு நிறுவனங்கள், அதற்குப் பிரதிபலனாக, ராணா கபூா் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன. இதுகுறித்து, அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதன் பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.


அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ராணா கபூரின் குடும்பத்தினா் நடத்தி வரும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் விசாரணைக்கு தேவைப்படுகின்றன. எனவே, ராணா கபூரையும் அவரது குடும்பத்தினரையும் ஒன்றாக விசாரிக்க வேண்டியுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா். இதனையடுத்து ராணா கபூரை, வரும் 11-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில், நேற்று ராணா கபூரின் மகள் ரோஷினி, வெளிநாடு தப்ப முயன்ற போது, மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், அவர் லண்டன் தப்பியோட முயற்சி செய்தார். முன்னதாக, அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.


ஏற்கனவே, கடன் மோசடி புகாரில் சிக்கி இந்தியாவின் இருந்து வெளியேறி லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நாட்டை விட்டு வெளியேறும் முன்னரே ரோஷினி கபூர் தடுத்து நிறுத்தபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.