தலைநகர் சென்னையில் வெடிக்குண்டு வீச்சு – மர்ம நபர்களுக்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை…!!!

Scroll Down To Discover
Spread the love

சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான தேனாம்பேட்டையில் புகழ்பெற்ற காமராஜர் அரங்கம் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் செவ்வாய் மதியம் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடித்ததில் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் ஏற்பட்டது.

அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்ததால், அதில் இருந்த பொதுமக்கள் பதறியடித்தபடி வெளியே வந்தனர். இதனால் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகள் போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
https://youtu.be/8NJzXMIh1FM
அந்த கண்காணிப்பு கேமராவில், அண்ணா மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்மநபர்கள் சாலையின் தடுப்பு சுவருக்கு மறுபுறம் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசும் காட்சி பதிவாகி இருந்தது.ஆனால் அந்த வெடிகுண்டு கார் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது. இதனால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அங்குள்ள கடையின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

இந்த நிலையில் பாதுகாப்பு மிகுந்த இடத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதால் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து துணை சூப்பிரண்டு தலைமையிலான ‘கியூ’ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவுத்துறையினரும் வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் யார்?, அவர்கள் குறிவைத்த காரில் சென்றது யார்? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே வெடிகுண்டு வெடித்த இடத்தை உதவி இயக்குனர் சோபியா தலைமையிலான தடயவியல் நிபுணர்கள் குழுவும் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர். சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.