தவறுதலாக ஃபாஸ்டேக் பாதையில் நுழைந்த வாகனங்களிடமிருந்து ரூ. 20 கோடி வசூல்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

Scroll Down To Discover
Spread the love

தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற வாகன போக்குவரத்துக்காக சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்த ஃபாஸ்டேக் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம், கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், தவறுதலாக ஃபாஸ்ட் டேக் பாதையில் சென்று கட்டணம் செலுத்தினால் இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் புதிய நடைமுறையால் வாகனப் போக்குவரத்து விரைவாக நடைபெறுவதுடன் காத்திருக்கும் நேரம் குறைவதால் மிகப்பெரிய அளவில் எரிபொருளும் மீதமாகும் என அரசு தெரிவித்திருந்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவரும் ஃபாஸ்டேக் முறையைக் கடைப்பிடிக்க முடியாததால் மேலும் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து அரசு உத்தரவிட்டது. தற்போது சுங்கச்சாவடிகளில் 75 விழுக்காடு பாதைகளில் ஃபாஸ்டேக் உள்ள வாகனங்களும் எஞ்சிய 25% பாதைகளில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் தவறுதலாக ஃபாஸ்டேக் பாதையில் நுழைந்த 18 லட்சம் வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.