அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : மக்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சன்னி வஃக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் தர உத்திரபிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என்றும் இதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.இதை தொடர்ந்து, மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.



இதையடுத்து, அயோத்தி தீர்ப்பின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய உள் துறை அமைச்சகம், அதிகாரிகள் குழுவை அமைத்தது. அக்குழு அறக்கட்டளையை நிறுவுவதற்கான பணிகளை செய்து வருகிறது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் 3 மாத கெடு வருகின்ற பிப்ரவரி 9ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற பெயரில் ராமர் கோயில் அமைக்க அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அறக்கட்டளை சுதந்திரமாக செயல்படும் என்றும் அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிவித்த பிரதமர், ராமர் கோயில் கட்ட நில ஒதுக்கீடு எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.