பரனூர் சுங்கச்சாவடியில் 18லட்சம் ரூபாய் கொள்ளை- சுங்கச் சாவடி ஊழியர்களே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது..!

Scroll Down To Discover
Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26-ந் தேதியன்று நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் சக டிரைவர்கள் பஸ்சை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பஸ் பயணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு பரனூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.


இதனால் அங்கு இருந்த கண்ணாடி கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன. மேலும் அன்றைய தினம் வசூலான பணத்தை எல்லாம் வாரி இறைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


இந்த நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளராக பணிபுரியும் ஆலப்பாக்கம் ஊராட்சி இருங்குன்றம் பள்ளியை சேர்ந்த விஜயபாபு என்பவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில்  கடந்த 26-ந் தேதியன்று வசூலான ரூ.18 லட்சம் சுங்கச்சாவடியில் இருந்தது. அன்றைய தினம் நள்ளிரவு நடந்த போராட்டத்திற்கு பின்னர் அங்கு இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

https://twitter.com/PARITHITAMIL/status/1223507781086371841?s=19


இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில்  இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசாரின்  விசாரணைக்கு பயந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் செந்தில் மற்றும் பரமசிவம் ஆகிய இருவரும் ரூபாய் 18 லட்சத்தை பதுக்கி வைத்ததாக ஒப்புக்கொண்டனர். இதில் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்து  போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.