கொழும்பிலிருந்து மும்பைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். அப்போது 9 காபி பொடி பாக்கெட்களில் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். 4.7 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.47 கோடி ஆகும்.
https://x.com/PIB_India/status/1984497121635225949
கொகைன் கடத்தி வந்த பெண், அதை வாங்கிச் செல்ல வந்த ஒருவர் உட்பட 5 பேரை டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சர்வதேச போதை கடத்தல் கும்பல், சமீப காலமாக போதைப்பொருளை கடத்த இந்திய பெண்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இதைக் கண்டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்களுக்குள் வைத்து கடத்துகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...