மூடப்பட்ட 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம் – மத்திய அரசு உத்தரவு…!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலத்தில் உள்ள 32 விமான நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 9ம் தேதி முதல் வரும் மே 15ம் தேதி காலை 5.29 மணி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது

இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம், “இந்த விமான நிலையங்கள் இப்போது உடனடியாக சிவில் விமான போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமான நிறுவனங்களுடன் நேரடியாக விமானங்களின் இயக்கம் குறித்து சரிபார்த்து, சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனத்தின் வலைதளங்களைக் கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

மீண்டும் சிவில் பயன்பாட்டுக்கு வரும் விமான நிலையங்கள்: ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மார், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குல்லு மணாலி (பூந்தர்), லே, லுதியானா, முந்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ், உத்தர்லாய் ஆகிய 32 விமான நிலையங்கள் தற்போது மீண்டும் சிவில் விமான போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரித்த பதற்றம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள இந்த 32 விமான நிலையங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இது மே 9, 2025 முதல் மே 14, 2025 வரை (இந்திய நேரப்படி மே 15, 2025 அன்று காலை 05 29 மணிவரை) அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, டெல்லி சர்வதேச விமான நிலையம் வழக்கம்போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) திங்கள்கிழமை (மே 12, 2025) வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விமான நிலைய செயல்பாடுகள் தற்போது சீராக இருக்கின்றன. இருப்பினும், மாறிவரும் வான்வெளி நிலைமைகள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, சில விமான அட்டவணைகள் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடி செயலாக்க நேரங்கள் பாதிக்கப்படலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கூடுதல் நேரத்தை அனுமதிக்க வேண்டும் என்றும், சீரான வசதிக்காக விமான நிறுவனம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் DIAL அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் பரபரப்பான டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை (IGIA) DIAL இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.