இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு – முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்தார். அவருடைய மனைவியும், இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் வந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ உயர் அதிகாரி, அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி உள்பட 5 உயர் அதிகாரிகளும் வருகை தந்தனர்.

மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் விமான நிலையத்தில், அவர்களை வரவேற்றார். துணை அதிபருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் வழிபாடு மேற்கொண்டனர். அவர்களுக்கு கோயிலின் கட்டிடக் கலை நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஜே.டி. வான்ஸ் – உஷா சிலுகுரி தம்பதியரின் 3 குழந்தைகளும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து இந்தியா வந்தனர். இரு மகன்களும் பைஜாமா குர்தா அணிந்திருந்தனர். மகள், அனார்கலி பாணியிலான சிறிய உடையை அணிந்திருந்தார். இந்திய உடைகளில் அவர்கள் வந்திருந்தது காண்போரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. வழிபாட்டை முடித்துக்கொண்டு அவர்கள் 5 பேரும், கோயிலின் முன்பாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்துக்கு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவர்களை பிரதமர் வரவேற்றார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி-ஜே.டி.வான்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். வர்த்தகம், வரிவிதிப்பு, பிராந்திய பாதுகாப்பு ஆகியவை பேச்சுவார்த்தையில் இடம் பெற்று இருக்கலாம் எனத்தெரிகிறது.