கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – இந்திய கடற்படை அதிரடி..!

Scroll Down To Discover
Spread the love

இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பலின் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட 2,500 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய கப்பல்கள் கடற்பகுதியில் சுற்றித் திரிவதாக கடந்த மார்ச் 31ம் தேதி இந்திய கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த கப்பல்களை, ஐ.என்.எஸ்., தர்காஷில் சென்ற கடற்படை அதிகாரிகள் குழு அதிரடியாக சோதனை நடத்தினர்.

மேலும், கடற்படையினருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் மும்பையில் உள்ள கடற்படையினரின் செயல்பாட்டு மையத்தின் உதவியால், ஒரு பாய் மரக்கப்பலில் போதைப்பொருள் கடத்துவது சோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கப்பலை சிறைபிடித்த கடற்படையினர், அதில் இருந்த 2,386 கிலோ கஞ்சா மற்றும் 121 கிலோ ஹெராயின் உள்பட மொத்தம் 2,500 கிலோ போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து, கப்பலை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதிலும், சீர்குலைப்பதிலும் இந்திய கடற்படையின் செயல்திறன் மற்றும் நிபுணத்துவத்தை இந்த பறிமுதல் சம்பவம் காட்டுகிறது