தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக RRTS ரயில் சேவை… திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் வழித்தடம் உள்பட 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக RRTS  (மண்டல விரைவு போக்குவரத்து அமைப்புக்காக) விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் 3 வழித்தடங்களில் 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதிவேக ரயில் சேவைக்காக விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் வரை 167 கி.மீ. தொலைவுக்கும், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் வரை 140 கி.மீ. தொலைவுக்கும், கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் வரை 185 கி.மீ தொலைவுக்கும் வழித்தடங்கள் உருவாக்க , தேவையான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இதற்கான முயற்சியை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது. இந்நிலையில், 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக (மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு- RRTS ) விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு என்பது ஒரு பிராந்தியத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் நெட் ஒர்க் ஆகும். தற்போது, மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும் வகையிலான அதிவேக ரயில் சேவை (மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு) டெல்லி – மீரட் இடையே செயல்பாட்டி உள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, பொதுமக்களின் விரைவு போக்குவரத்து தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.