அதானிக்கு எதிராக அமெரிக்காவில் மோசடி வழக்கு – இந்தியாவின் உதவியை நாடிய அமெரிக்கா..!

Scroll Down To Discover
Spread the love

தொழிலதிபர் அதானிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உதவும்படி இந்திய சட்டம் மற்றும் நீதித்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, அமெரிக்கா பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.

இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.எனவே இந்த மூன்று வழக்குகளையும், ஒரே அமர்வில் விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணையின்போது, அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவுமாறு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகளின் உதவியை கோரியுள்ளதாக அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.

மேலும் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நீதிமன்றத்தில் பங்கு பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.