ரூ.1.10 கோடி மதிப்பிலான 2.65 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் : சென்னை விமான நிலையத்தில் 3 பேர் கைது..!

Scroll Down To Discover
Spread the love

கொழும்பிலிருந்து இலங்கையைச் சேர்ந்த அஷாப் அலிகான் (வயது 51), யுஎல் 123 என்ற விமானத்திலும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 21, கலாந்தர் அப்பாஸ் (வயது 36) ஆகியோர் இண்டிகோ விமானத்திலும் திங்கள் இரவு சென்னைக்கு வந்தனர். இவர்கள் மூவரும் வெளியேறும் பாதையில் மறிக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது தங்கப் பசையை மலக்குடலில் மறைத்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டனர். தனிப்பட்ட தேடல் மூலம் அவர்களிடமிருந்து 10 தங்கப் பசைக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் செவ்வாய்க்கிழமை காலையில் இலங்கையைச் சேர்ந்த முகமது ரம்ஸீன் (வயது 51), இராமநாதபுரத்தைச் சேர்ந்த தஜிலாமின் (வயது 41) ஆகியோர் கொழும்பிலிருந்து யுஎல்125 விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அவர்கள் வெளியேறும் பாதையில் மறிக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரித்தபோது தங்கப் பசையை ரப்பர் படிவ வடிவத்தில் தங்கள் மலக்குடலில் வைத்துள்ளதை ஒப்புக் கொண்டனர். தனிப்பட்ட தேடலில் அவர்களிடமிருந்து 7 தங்கப் பசை கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே பாணியில் கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நாகூர் கனி (வயது 22) என்பவரிடமிருந்து 3 தங்கப் பசை கட்டுகளும், 60 கிராம் எடையுள்ள சிறிய அளவிலான தங்கத் துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் சார்ஜாவிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர்.

சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் இவ்வாறு மொத்தம் ஆறு வழக்குகளில் 20 தங்கப் பசை கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை பிரித்தெடுத்த போது ரூ.1.10 கோடி மதிப்பிலான 2.65 கிலோ தங்கம் கிடைத்தது. இதில் 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.!