பாலியல் புகார்: டான்ஸ் மாஸ்டர் ஜானி தலைமறைவு… ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தெலுங்குத் திரையுலகிலும் அது போன்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என குரல் எழுந்தது. இந்நிலையில் ஜானி மாஸ்டர் பற்றிய புகார் தெலுங்குத் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் பிரபல டான்ஸ் மாஸ்டராக அறியப்படுபவர் ஜானி. முன்னணி திரையுலக நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர். தேசிய விருதையும் வென்றிருந்தவர். 40 வயதான அவர் மீது 21 வயது உதவி நடன இயக்குநர் ஒருவர் அளித்த பாலியல் புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாதில் உள்ள ராய்துர்கம் போலீஸ் ஸ்டேஷனில் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதையடுத்து, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜானி மாஸ்டர் பரப்புரை மேற்கொண்டார்.அவர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ள தருணத்தில் இருந்து, அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

இது குறித்து துணை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கூறி உள்ளதாவது; பெண் அளித்த புகாரை முழுமையாக பதிவு செய்திருக்கிறோம். மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள ஜானி தலைமறைவாக உள்ளார். சம்பவம் நடைபெற்ற காலத்தில் புகார்தாரரின் வயது 18 வயதை பூர்த்தி அடையவில்லை.

எனவே உரிய விசாரணையை தொடர்ந்து ஜானி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவாகுமா, இல்லையா என்பது தெரிய வரும். தகுந்த நடவடிக்கை கட்டாயம் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.