லக்னோவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து – 8 பேர் உயிரிழப்பு..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹர்மிலாப் பில்டிங் என அழைக்கப்படும் இந்தக் கட்டிடம் மருத்துவப் பொருள்களின் வணிகத்துக்கான குடோனாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழும்போது அதன் அடித்தளத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில், உள்ளூர் போலீஸார், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் (எஸ்டிஆர்எஃப்) குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழும்போது அதன் அடித்தளத்தில் பணிகள் நடந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், லக்னோ மக்களவை உறுப்பினருமான ராஜ்நாத் சிங், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “லக்னோவில் கட்டிடம் இடிந்து விழுந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இது தொடர்பாக லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தொலைபேசியில் பேசி, தகவலை கேட்டறிந்தேன். உள்ளூர் நிர்வாகம் அங்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவி அளிக்கப்பட்டு வருகிறது” என எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த கட்டிடம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சனிக்கிழமை அன்று சில கட்டுமான பணிகள் நடைபெற்றது. அந்த சூழலில்தான் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. காயமடைந்த மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும்” என மாவட்ட மாஜிஸ்திரேட் சூர்யபால் கங்வார் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.