தோப்பூர் அங்காள பரமேஸ்வரி கோவில் பூட்டை உடைத்து கொள்ளை: காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை : கிராம மக்கள் குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது தோப்பூர் அங்காள பரமேஸ்வரி சின்ன கருப்பசாமி கோவில்.  பிரசித்தி பெற்ற இக்கோவில் தோப்பூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் உள்ளது. இந்நிலையில் மர்மநபர் மர்மநபர் இக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த குத்துவிளக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.மாலை கோவிலுக்கு வந்த பூசாரி கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைகண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த கிராம மக்கள் இதே கோவிலில் தொடர்ந்து மூன்று முறை கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். கோவிலில் தொடர்ந்து மூன்று முறை கொள்ளை சம்பவம் நடைபெற்றதில் 2 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களாகதான் இருக்க வேண்டும் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகவும் எனவே காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.