ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த முடியாதவர்கள் கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை பார்த்து கேள்வியா? எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு ஸ்டாலின் பதிலடி..!

Scroll Down To Discover
Spread the love

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த முடியாதவர்கள் கலைஞர் விழாவை பார்த்து கேள்வியா?  என இபிஎஸ் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கரின் இல்லத்திருமண விழாவில் இன்று (திங்கட்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. கலைஞரின் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரில் சென்று பார்வையிட்டார்.

திமுககாரர் பேசுவதை விட, சிறப்பாக நேற்று ராஜ்நாத் சிங் கலைஞர் குறித்து பேசினார். உள்ளத்தில் இருந்து உண்மையைப் பேசினார் ராஜ்நாத் சிங். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலைஞரை பற்றி பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கலைஞர் நாணயம் வெளியிடுகிறார்கள் அதில் இந்தி இடம் பெற்றுள்ளது. `தமிழ், தமிழ்’ என திமுகவினர் முழங்குகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டு நடப்பு பற்றி புரிந்திருக்க வேண்டும் அல்லது மூளையாவது இருக்க வேண்டும். மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்ததால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.

அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும், அண்ணா, கலைஞர் பெயரிலான நாணயத்தில் மட்டும்தான் தமிழ் இடம் பெற்றுள்ளது, கலைஞர் பெயரிலான நாணயத்தில் `தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதைக் கூட புரிந்து கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் தான் நமக்கு கிடைத்திருக்கிறார். ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் அவருக்காக ஓர் இரங்கல் கூட்டமாவது நடத்தி இருக்கிறார்களா? ஓர் இரங்கல் கூட்டத்தை கூட நடத்துவதற்கு யோக்கியதையற்றவர்கள் கலைஞருடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?. ராஜ்நாத் சிங்கை அழைத்து நாம் நிகழ்ச்சி நடத்தியதால் திமுக, பாஜகவுடன் உறவு வைத்திருக்கிறது என்ற ஒரு செய்தியை கிளப்பி இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

எடப்பாடி பழனிச்சாமியை போல உருண்டு போய், பதுங்கி போய் பதவி வாங்க வேண்டிய தேவை திமுகவுக்கு கிடையாது, எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுப்போம், அதேவேளையில் அண்ணாவின் மீது ஆணையாக சொல்கிறேன். நமக்கென்று இருக்கின்ற உரிமையை ஒரு நாளும் விட்டுத்தர மாட்டோம். இதுதான் அண்ணாவும் கலைஞரும் கற்றுக் கொடுத்திருக்கின்ற பாதை. இவ்வாறு அவர் பேசினார்.