முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை – ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!

Scroll Down To Discover
Spread the love

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆக.20-க்கு ஒத்திவைத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

இதில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட்டில் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் செந்தில் பாலாஜி தற்போது வரை சென்னை புழல் சிறையில் உள்ளார்.

இதில் கடந்த முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் அவரது வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார். மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனுவை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. நீதிமன்றம் கூறிய விளக்கங்களை சொலிசிட்டர் ஜெனரல் ஆக.20ம் தேதி அளிக்க உள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆக.20ம் தேதி முதல் வழக்காக பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜாமீன் மனு விசாரணை முடிந்து இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.