மயில் கறி சமைத்து சாப்பிடுவது எப்படி…? வீடியோ பதிவிட்ட யூடுயூபர் மீது வழக்குப்பதிவு!

Scroll Down To Discover
Spread the love

மயில் கறி சமைப்பது குறித்து வீடியோ வெளியிட்ட தெலங்கானா யூடியூபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில்  மயிலை சமைத்து அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடிப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.

சர்ச்சைக்குப்பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மயில் நமது தேசியப் பறவையாகக் கருதப்படுகிறது. அதை வேட்டையாடுவது குற்றச்செயலாகும். மயில்கள், வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டம், 2022இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது