வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை – ஆய்வுக்கு பின், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி..!

Scroll Down To Discover
Spread the love

வயநாடு நிலச்சரிவால் 350-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வயநாடு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனும் பலதரப்பு கோரிக்கையின் சட்ட அம்சங்களை மத்திய அரசு ஆய்வு செய்யும் என்று மத்திய பெட்ரோலிய, சுற்றுலாத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

வடகேரளத்தில் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழை எதிரொலியாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவின்போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். சாலியாற்று வெள்ளத்தில் சிலா் அடித்துச் செல்லப்பட்டனா்.மண்ணில் புதையுண்டவா்களையும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களையும் மீட்பதற்கான மீட்பு-தேடுதல் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்ட நிா்வாக தகவலின்படி கடந்த சனிக்கிழமை இரவு வரை 219 உடல்கள் மற்றும் 143-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 206 பேரை இன்னும் காணவில்லை.உடல்களைக் கண்டறிவதற்கான கூடுதல் வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா். சாலியாற்றில் 40 கி.மீ. தொலைவுக்கு தேடுதல் பணிகள் தொடா்ந்து வருவதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் கூறினாா்.

இந்நிலையில், நிலச்சரிவு பாதித்த பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக கேரளத்தைச் சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி வயநாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மீட்புப் படையினருடன் அவா் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சுரேஷ் கோபி, ‘வயநாடு நிலச்சரிவின் பாதிப்புகளை மதிப்பீடு செய்து, சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற பலதரப்பு கோரிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்யும். பேரிடா் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு புரிந்துகொண்ட அனைத்து அம்சங்களையும் மத்திய அரசிடம் முன்வைப்பேன்.

நிலச்சரிவு பாதிப்பைக் கணக்கிட்டு, மத்திய அரசு அளிக்க வேண்டிய உதவிகள் குறித்து மாநில அரசே கோரிக்கை வைக்க வேண்டும். மாநில அரசின் கோரிக்கைக்குப் பின்னரே மத்திய அரசின் உதவிகள் குறித்து எதுவும் கூற முடியும்.நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டவா்களின் மறுவாழ்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவா்களுக்கு உளவியல் கலந்தாலோசனையும் வழங்கப்பட வேண்டும்’ என்றாா்.