கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம்…. சிபிஐ விசாரணை தேவை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ..!

Scroll Down To Discover
Spread the love

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் ஜூன் 19 அன்று உயிரிழந்தனர். இதேபோல ஜூன் 20 அன்று மேலும் 19 பேர் இறந்தனர்.

இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் ஜூன் 21 அன்று உயிரிழந்தனர். இதேபோல கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 90 நபர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம்  பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 54 பேர் இறந்துள்ளனர். பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியலின மக்கள்.கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே?. மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் திமுகவினர் உட்பட INDIA கூட்டணியினர் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.