சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகம்..

Scroll Down To Discover
Spread the love

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடக்கக்கூடிய மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது. இந்நிலையில் வருகிற யாத்திரை காலங்களில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும், யாத்திரையின் போது ஏற்படும் அவசர தேவைக்காகவும் மெய்நிகர் வரிசை முறையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு காப்பீடு வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. வருகிற மாதாந்திர பூஜை யாத்திரை காலத்திலேயே இந்த முறை அமல்படுத்தப்படும்.தரிசனத்துக்கு பக்தர்கள் மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்யும் போது காப்பீட்டுக்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்களின் பயணத்தின்போது, அவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி கவரேஜை விரிவுபடுத்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

மாதாந்திர பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது மெய்நிகர் வரிசை மூலமாக தினமும் 50ஆயிரம் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் மாதம் தொடங்கும் புனித யாத்திரை காலத்தில் ஒரு நாளைக்கு 80ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.சுமூகமான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காகவே இந்த வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரத்யேகமாக கட்டப்பட்ட தடுப்புகள் வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்பம்-அரவணை பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.