மெட்ரோ, பேருந்து, மின் ரயில் அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் – ஜூன் இறுதியில் முக்கிய முடிவு..!

Scroll Down To Discover
Spread the love

சென்னையில் பொதுப் போக்குவரத்துக்காக மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன. இதில், வெவ்வேறு கட்டண முறை மற்றும் டிக்கெட் வழங்கும் முறை நடைமுறையில் இருக்கிறது.

ஒரு நபர் அடுத்தடுத்து இந்த சேவைகளை பயன்படுத்தும்போது, இந்த வேறுபட்ட டிக்கெட் முறையால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.இதற்காக, ஒருங்கிணைந்த முறையில், ஒரே டிக்கெட் நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமமான கும்டா இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

சென்னையில் பல்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுவான, க்யூஆர் குறியீடு வாயிலாக டிக்கெட் வழங்கும் முறையை அமல்படுத்த, ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகள் தனியார் ஆலோசகர் மூலமாக பெறப்பட்டது.

இதையடுத்து, பொதுவான டிக்கெட் முறைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், எந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் ஏற்றது என்பதை முடிவு செய்வதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக இறுதி முடிவு ஜூனில் எடுக்கப்பட உள்ளது.

இது குறித்து கும்டா {CUMTA}அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக ஜூன் இறுதியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். முதலில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட் என்ற முறை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, மின்சார ரயிலில் இந்த முறை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.