பேரன் பிரஜ்வல் மீது நடவடிக்கை.. ஆட்சேபனை இல்லை – தேவகவுடா

Scroll Down To Discover
Spread the love

தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றதாகவும், அவர் ஜெர்மனியில் இருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தங்கள் வீட்டில் வேலை பார்த்த பெண்ணை, ரேவண்ணா கடத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். கடத்தப்பட்ட அந்த பெண்ணை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை கருத்து எதையும் தெரிவிக்காத மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, முதல் முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமருமான தேவகவுடா செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் எச்.டி. ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எங்கள் குடும்பத்தின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் எச்.டி. குமாரசாமி ஏற்கனவே பேசியிருக்கிறார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சாத்தியமான அனைத்து சட்ட வழிகளையும் அரசு தொடர வேண்டியது அவசியம். எனினும், எச்.டி.ரேவண்ணா மீதான வழக்குகள் அவரைக் குறிவைத்து நடத்தப்பட்டவை என்பது தெளிவாகிறது. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் அவர்களின் பெயர்களைக் கூற மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

தேவகவுடாவுக்கு இன்று 91வது பிறந்தநாள். மகன் ரேவண்ணா மற்றும் பேரன் பிரஜ்வல் ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என கூறப்படுகிறது. மேலும், பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் அவர் ரத்து செய்துள்ளார். பிரஜ்வல் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க கர்நாடக காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.