மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மீது பாலியல் புகார் – ராஜ்பவன் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பிய போலீஸார்..!

Scroll Down To Discover
Spread the love

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார், தொடர்பாக விசாரிக்க, ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு அம்மாநில போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க ஆளுநராக இருந்து வருபவர் சி.வி. ஆனந்த போஸ். இவர் மீது ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய பெண் ஒருவர், கொல்கத்தா போலீஸில் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு வங்க காவல் துறை சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்த விசாரணை குழுவினர் தலைவர் துணை ஆணையர், நேற்று இந்த வழக்கு விசாரணையைத் தொடங்கினார்.

இந்நிலையில் ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க, ராஜ்பவனில் (ஆளுநர் மாளிகை) பணிபுரியும் ஊழியர்களுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது

இது தொடர்பாக மேற்கு வங்க காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவினர் அடுத்த சில நாட்களில் இந்த புகாரில் சில சாட்சிகளிடம் விசாரணை நடத்துவர். மேலும், ஆளுநர் மாளிகையில் வழக்கு தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் இருந்தால் அவற்றை வழங்குமாறு கேட்டுள்ளோம்.” என்றார்.

ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் அளிக்கப்பட்ட போதிலும், அவருக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள விலக்கு இருப்பதால், காவல் துறை அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் 361 (2)வது பிரிவின் கீழ், ஆளுநர் பதவிக்காலத்தில் அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க முடியாது.

இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆளுநர் தன் மீது சில அரசியல் கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளையும், இகழ்ச்சிகளையும் வரவேற்பதாகவும், இதுபோன்ற மேலும் பல குற்றச்சாட்டுகளை தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலின் போது அரசியல் முதலாளிகளை சமாதானம் செய்வதற்காக அங்கீகரிக்கப்படாத, முறைகேடான, ஏமாற்று மற்றும் தூண்டுதல் பேரில் விசாரணைகளை நடத்தும் போர்வையில் ஆளுநர் மாளிகையில் போலீஸார் நுழைவதற்கு ஆளுநர் ஆனந்த போஸ் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.