மதுபான கொள்கை ஊழல்… சிபிஐ காவல் நிறைவு -கவிதாவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவின் 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் அவரை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 நாட்களும் பிறகு மேலும் 3 நாட்களும் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அமலாக்கத் துறை காவல் முடிந்து மார்ச் 26-ம் தேதி கவிதா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கவிதாவின் நீதிமன்ற காவல் இன்று (ஏப்.9) நிறைவடைந்த நிலையில், அமலாக்கத் துறை அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் காலையில் ஆஜர்படுத்தியது. அப்போது கவிதாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத் துறை கோரியது. இதனை ஏற்ற நீதிமன்றம் காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.

இதனிடையே, கடந்த ஏப்.11 ஆம் தேதி கவிதாவை திகார் சிறையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கவிதா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகத் தெரிவித்தனர். 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரினர். கவிதா தரப்பு கைதே சட்டவிரோதமானது என வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கவிதாவை மூன்று நாட்கள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில் சிபிஐ காவல் முடிந்து அவர் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்.23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.