Alexa உதவியுடன் குரங்கை விரட்டிய சிறுமி – எதிர்காலத்தில் வேலை தருவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரபிரதேசத்தில் வீட்டினுள் நுழைந்த குரங்கை அலெக்சாவை பயன்படுத்தி ஒரு சிறுமி விரட்டி அடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்ற நிகிதா என்ற 13 வயது சிறுமி, அங்கு குடும்பத்தினருடன் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது தன் அக்கா குழந்தையுடன் தனியாக ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சமையலறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. அச்சமயத்தில் குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

சமையலறையில் நுழைந்த குரங்கு வீட்டு பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி வீசி இருக்கிறது. பின்னர் குழந்தையை நோக்கி குரங்கு வந்ததால், என்ன செய்வது என்று புரியாமல் நிகிதா அமைதியாக இருந்திருக்கிறார். குழந்தை குரங்கைப் பார்த்து அழுதிருக்கிறது.அச்சமயத்தில் வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்சா சாதனம் இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அலெக்சா சாதனம் நாய் குரைப்பது போன்ற ஒலியை எழுப்பியதால், குரங்கு அலறித்துடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

இந்த நிகழ்வில் நிகிதா தனது சமயோசித புத்தியால் குரங்கை விரட்டியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் நாம் நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாக உள்ளது.

இந்தநிலையில், உத்திர பிரதேசத்தில் குழந்தையை தூக்க வந்த குரங்கிடமிருந்து தப்பித்து கொள்ள கூகுள் அலெக்சாவை நாயை போல குரைக்க வைத்து சமயோசிதமாக தப்பித்த சிறுமிக்கு எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.