குழந்தைகள் தொடர்பான ஆபாச பட விவகாரம் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Scroll Down To Discover
Spread the love

ஆபாசப் படங்கள் பார்ப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இளைஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இளைஞர் மீதான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவில், “ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல” எனக் கூறி இருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு முன்பு இன்று (11.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை எனக் கூறியிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும்? நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து கொடுமையானது” எனவும் தலைமை நீதிபதி சந்திர சூட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் தரப்புக்கு நோட்டிஸ் வழங்கியதுடன், தமிழக காவல்துறையினர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு 4 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.