இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது..!

Scroll Down To Discover
Spread the love

சங்கர் மகாதேவன் மற்றும் ஜாகிர் ஹுசைனின் ‘சக்தி பேண்ட்’ இசை விருதுகளில் உயரிய விருதுக்கான கிராமி விருதை வென்றது. குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் கிராமி விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இதன், 66-வது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இந்தியாவின் ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவனின் ஃபியூஷன் இசைக்குழுவான சக்தி இசைக்குழுவுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த உலகளாவிய இசை ஆல்பம் பிரிவில் விருதுகள் வென்றனர் ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவன் அடங்கிய சக்தி குழு. இவர்களின் சமீபத்திய இசை ஆல்பமான ‘திஸ் மொமென்ட்’ சிறந்த உலகளாவிய இசை ஆல்பம் பிரிவில் விருதைப் பெற்றது.

சங்கர் மகாதேவன், ஜாகீர் உசேன் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் கிராமி விருதை பெற்றுக்கொண்டனர். விருதுக்கு பின் பேசிய சங்கர் மகாதேவன் “கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. நாங்கள் இந்தியாவை நினைத்து பெருமை கொள்கிறோம். எனது மனைவிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன் ” என்று நெகிழ்ச்சியாக பேசினார். அவர் விருதுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/arrahman/status/1754399458555842580

இவர்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “இன்று இந்தியாவுக்கு கிராமி மழை பொழிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.