கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் – திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி மதுரை மாவட்டம் கீழக்கரையில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.62.78 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் 77 ஆயிரத்து 683 சதுர அடியில் நிறைவடைந்துள்ளது. 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதான அரங்கிற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. அரண்மனை போல் இந்த அரங்கத்தின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் நுழைவு வாயிலில் காளை சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி உள்ளிட்ட போட்டி களை மைதானத்தில் கேலரியில் அமர்ந்து பார்ப்பது போன்று இனிவரும் காலங்களில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த அரங்கம் உருவாகியுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு மைதானத்தை அடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரங்கத்தை திறந்து வைத்தார். மேலும் ஜல்லிக்கட்டு காளை சிலையையும் திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகம், அருங்காட்சியங்கள், ஒலி-ஒளி காட்சி கூடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.