250 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகை – இடம் மாற்ற ஒப்புதல்!

Scroll Down To Discover
Spread the love

250 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டி ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. கடந்த 1733-ம் ஆண்டு முதல் 1764-ம் ஆண்டு வரை ஹோட்டல் இங்கு இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பில் இவ்விடம் சேதமாக்கப்பட்டது. பின்னர் 1761-ல் மீண்டும் கட்டுமானம் செய்யப்பட்டு, 1954-ம் ஆண்டு வரை பிரெஞ்சு தலைமை கமிஷனர் அலுவலகமானது.

புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பிறகு 1963-ம் ஆண்டு முதல் துணை நிலை ஆளுநர் மாளிகையாக ராஜ்நிவாஸ் உள்ளது. ராஜ் நிவாஸில் ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

சுமார் 250 ஆண்டு பழமையான ராஜ் நிவாஸ் கட்டுமானம் தற்போது சேதம் அடைந்துள்ளது. காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. மழை நீர் ஒழுகுவதும் நடக்கிறது. இதையடுத்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகை உறுதித் தன்மையை இழந்தததால் பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய பொதுப் பணித்துறை பரிந்துரை செய்தது. மேலும் பழமையான ராஜ்நிவாஸை புதுப்பிப்பதற்கு பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, அது தொடர்பான கோப்புகள் துணை நிலை ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் துணைநிலை ஆளுநர் மாளிகை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேரி நகராட்சி கட்டிடத்தில் செயல்படவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.