ஐ.டி சோதனையில் சிக்கிய ரூ.351 கோடி… காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இல்லை – எம்பி தீரஜ் சாஹு விளக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.351 கோடிக்கும் காங்கிரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் எம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் எம்பி தீரஜ் சாஹு என்பவருக்கு சொந்தமான இடங்களில் (ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம்), கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.351 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. இவ்விவகாரம் ஆளும் பாஜக – காங்கிரஸ் இடையே மோதலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘வருமான வரித்துறையால் மீட்கப்பட்ட பணம், எனது மதுபான நிறுவனங்களுக்கு சொந்தமானது. இந்த பணத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அதேபோல் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பும் இல்லை. நேரடியாக மதுபான தொழிலில் நான் ஈடுபடவில்லை. அந்தப் பணத்தை மீட்பது குறித்த கேள்விகளுக்கு, எனது குடும்பத்தினர் பதில் அளிப்பார்கள். மீட்கப்பட்ட பணம் யாவும் என்னுடையது அல்ல. எனது குடும்பம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமானது. எல்லாவற்றுக்கும் கணக்கு காட்ட முடியும்’ என்றார்.

இதற்கிடையே வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பகதூர் அளித்த பேட்டியில், ‘வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கான தொடர்புகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசியல் தொடர்புகள் இருப்பதை நிராகரிக்க முடியாது’ என்றார்.