அரசு அனுமதியை மீறி சிறப்புக் காட்சி – திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ்..!

Scroll Down To Discover
Spread the love

அரசு அனுமதியை மீறி சிறப்புக் காட்சிகளை திரையிட்ட திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலோ ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவதை திரையரங்குகள் கடைபிடித்து வந்தன. அரசின் அனுமதியோடு இந்த 4 மணிகாட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ஒன்றாக ரிலீஸ் ஆனபோது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு பிரச்சனை வெடித்தது.

அதுமட்டுமின்றி இந்த 4 மணிகாட்சி கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இதையடுத்து அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தமிழக அரசு, இனி எந்த படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக அறிவித்தது.

தமிழகத்தில் ஸ்பெஷல் ஷோ அனுமதி பெற்றால் காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. இதைப்பின்பற்றி தான் தற்போது அனைத்து படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீபாவளி விருந்தாக தமிழில் ஜப்பான், ஜிகர்தண்டா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதுபோல், இந்தியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த டைகர் 3 படமும் வெளியானது. இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படத்தை திருப்பூரில் உள்ள சக்தி சினிமாஸ் என்கிற திரையரங்கம், அதிகாலை 7 மணி காட்சி திரையிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதற்காக ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் நடைபெற்ற ஸ்கிரீன் ஷாட்டுகளும் வைரலாக பரவின.

இந்த சக்தி சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளர் யாரென்றால், தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்ரமணியம் தான். அவர் அரசாணையை மீறி டைகர் 3 படத்தை திரையிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.