பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி : ராணிப்பேட்டையில் சோகம் – பெரியப்பா மீது வழக்குப்பதிவு!

Scroll Down To Discover
Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் அருகே பட்டாசு வெடித்து நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ், இவரது மனைவி அஸ்வினி. தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார். தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர்.நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.

அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது.

இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.

இது குறித்து போலீசார் விசாரணையின் போது மதுபோதையில் சிறுமியை ஒரு கையில் வைத்து கொண்டு, மற்றொரு கையால் பட்டாசை வெடித்த போது விபத்தில் சிறுமி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்ட சிறுமியின் பெரியப்பா மீது  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.