ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி – பிரதமர் மோடி பெருமிதம்

Scroll Down To Discover
Spread the love

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது உணர்வுப்பூர்வமானதாகவும், பெருமிதமானதாகவும் இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவது பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா கிராமத்துக்குச் சென்ற பிரதமர் அங்கு சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்தோ – திபெத் படையினருடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா எல்லைப் பகுதியில் உள்ள நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது மிகவும் உணர்வுப்பூர்வமானது; பெருமிதமானது. வீரர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து தொலைவில் இருக்கிறார்கள். அவர்களது அர்ப்பணிப்பு காரணமாகவே நாட்டு மக்களின் வாழ்க்கை ஜொலிக்கிறது.

நமது ராணுவ வீரர்களின் துணிச்சல் அசாத்தியமானது. மிகக் கடினமான சூழலில், குடும்பத்தினரை விட்டு விலகி, மிகப் பெரிய தியாகங்களை அவர்கள் செய்து வருகிறார்கள். அதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்கிறார்கள். இத்தகைய கதாநாயகர்களுக்கு நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 500க்கும் மேற்பட்ட பெண் ராணுவ அலுவலர்களின் பணி நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களை இயக்குபவர்களாகவும் பெண் ராணுவ அதிகாரிகள் திகழ்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நான் நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன். ராமர் இருக்கும் இடம்தான் அயோத்தி என சொல்லப்படுவது உண்டு. ஆனால், என்னைப் பொறுத்தவரை பண்டிகை என்பது நமது வீரர்கள் இருக்கும் இடம்தான். கடந்த 30-35 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் இல்லாமல் நான் தீபாவளியைக் கொண்டாடியது கிடையாது. பிரதமராக இருக்கும்போதும், முதல்வராக இருக்கும்போதும் ஏதேனும் ஒரு எல்லைக்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன்” என தெரிவித்தார்.

கடந்த தீபாவளியின்போது பிரதமர் நரேந்திர மோடி கார்கில் வந்திருந்தார். அப்போது பேசிய அவர், தீபாவளி என்பது தீமையை ஒழித்து நன்மையை வழங்குவது; அதைப் போல் பயங்கரவாதத்தை ஒழித்து நன்மையைப் பெருக்க தீபாவளி வாய்ப்பளிக்கட்டும் என கூறினார்.