எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கவேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். குறைந்தபட்சம், ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கும், இனி விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கும் எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள் தமிழ்நாடு முழுவதும் பெண்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மேல்முறையீடு செய்யச் செல்லும் இடங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் கண்டிக்கத்தக்கதாகும்.

கடந்த 18-ந் தேதி முதல் மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அங்கு அவர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்படுவதுடன், தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி அலைக்கழிக்கப்படுகின்றனர். இது தமிழ்நாட்டு ஏழைக் குடும்பத்து பெண்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை என்பதே அனைவருக்கும் அடிப்படை வருவாய் என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது ஆகும். பல நாடுகளில் இந்த உரிமைத் தொகை திட்டம் அனைவருக்கும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் கூட இந்த திட்டம் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என்று தான் கூறப்பட்டிருந்ததே தவிர, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவும், விண்ணப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குவது எந்த வகையிலும் சரியல்ல

அதுமட்டுமின்றி, இந்தியாவில் பொது வினியோகத் திட்டத்தை வருமான வரம்பு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதற்காக உச்சநீதி மன்றத்தின் பாராட்டுகளையும் தமிழகம் பெற்று உள்ளது. அதே அணுகுமுறை தான் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் தொடர வேண்டும்.

அதன் படி, தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். குறைந்த பட்சம், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், இனி விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கும் எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.