சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு – உத்தரபிரதேசத்தில் வழக்குப்பதிவு..!

Scroll Down To Discover
Spread the love

மத உணர்வுகளை சீர்குலைத்ததாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் வழக்கறிஞர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால், உதயநிதி ஸ்டாலின் அந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கறிஞர்கள் அளித்த புகார் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் உடன் கர்நாடக மாநில மந்திரி பிரியங்க் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.