கேரளாவில் எலி காய்ச்சல் பரவல் எதிரொலி – தமிழக எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!

Scroll Down To Discover
Spread the love

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எலி காய்ச்சல் பரவி வருகிறது. இதனையடுத்து தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லை மாவட்டங்களான கோவை, நீலகிரியிலும், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வேலந்தாவளம், ஆனைகட்டி, வால்பாறை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரிகள், தாய், சேய் நல ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள் ஆகியவற்றில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அனைத்து சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்கின்றனர். இதுதவிர ஏ.டி.எஸ். கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை மூடிவைத்து பராமரிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பொது இடங்களில் மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர், கக்கநல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். குறிப்பாக கேரளாவுக்கு அருகே உள்ள தமிழக எல்லை மாவட்டங்களான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.