நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

நாட்டில் தற்போது உள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடிக்குத் தீா்வுகாண, புதியதாக 8 நகரங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில்’ நகர்புறங்கள்-20′ என்ற ஜி20 கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறங்கள் மேம்பாட்டுத் துறைக்கான ஜி20 பிரிவின் இயக்குநர் எம்.பி.சிங் பேசியதாவது:- மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் நகரங்கள் உள்ளன. புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள எதிர் பாராத வளர்ச்சி, நகரத்தின் அடிப்படை கட்டமைப்புத் திட்டத்தைப் பாதிப்பதாக உள்ளது.

நாட்டில் புதிய நகரங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என 15-வது நிதி ஆணையத்தின் அறிக்கை ஒன்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அனுப்பியுள்ள 26 புதிய நகரங்கள் குறித்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டு, அவற்றில் 8 நகரங்களை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நகரங்களுக்கான இடங்கள், அவற்றை உருவாக்குவதற்கான கால அளவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். புதிய நகரங்கள் உருவாகும் போது, 200 கி.மீ. சுற்றளவு பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் முன்னேற்றம் அடையும். இவ்வாறு அவர் கூறினார்.