வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம்..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பயணிகளின் வசதிக்காக நேரடி பயணச் சீட்டை பெற்று கொள்ளும் முறை, பயண அட்டை, கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை ஆகியவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர்களான ராஜேஷ் சதுர்வேதி, அர்ஜுனன் ஆகியோர் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த புதிய வசதியின் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ் அப் கியூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மெட்ரோ நிறுவனம் அளித்துள்ள 8300086000 என்ற எண்ணில் CMRL லைவ் என்னும் சாட் வழியே டிக்கெட் பதிவு செய்யலாம்.


முதலில் பயண விவரங்களை குறிப்பிட்டு அதற்கான பணத்தை யுபிஐ மூலம் செலுத்தினால் கியூ ஆர் கோடு பயணச் சீட்டு வாட்ஸ் அப் மூலம் கிடைக்கும். இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள கியூ ஆர் கோடு ஸ்கேனரில் காண்பிப்பதன் மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

புதிய வசதி மூலம் ஒரு மொபைலில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20% சலுகை தரப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.