இம்ரான் கான் கைது சட்டவிரோதம் : உடனே விடுதலை செய்ய வேண்டும் – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது என்றும், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு அமைப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இம்ரான் கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கு பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தனது கைதை எதிர்த்து இம்ரான் கான் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் மூன் இன்று விசாரணைக்கு வந்தது .

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ நீதிமன்ற பதிவாளரின் அனுமதியின்றி எவரையும் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்ய முடியாது. பாகிஸ்தானின் ஊழல் தடுப்புப் பிரிவு இம்ரான்கானை ஒருமணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். விசாரணைக்கு வந்த ஒருவரை எப்படி கைது செய்ய முடியும்? இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. மேலும் நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது