எடப்பாடி பழனிசாமி துரோகி எனில் திமுக எங்களுக்கு பொது எதிரி… அ.தி.மு.கவை மீட்டெடுப்போம் – ஓபிஎஸ்- டி.டி.வி.தினகரன் கூட்டாக அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து முதல் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.அப்போது, சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக்கப்பட்டார். தொடர்ந்து, ஓ. பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார்.

இதற்கிடையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் இணைந்தனர். டி.டி.வி தினகரன் அ.ம.மு.க. என்ற கட்சியை தொடங்கி நடத்திவந்தார். இந்நிலையில், இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்ட ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி நட்பில் விரிசல் ஏற்பட்டது.தற்போது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது. ஓ. பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று டி.டி.வி. தினகரனை அவர் சந்தித்தார்.

சென்னையில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் அவரை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு பின்னர் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டி.டி.வி.தினகரன்: அண்ணன் ஓபிஎஸ்ஸுக்கும் எனக்கும் சுயநலம் கிடையாது. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். பண பலத்தை வைத்துக்கொண்டு, ஆணவம், அகங்காரத்தோடு செயல்படக்கூடிய ஒரு அரக்கர்கள் கும்பலிடம் இருந்து அம்மாவின் இயக்கம், புரட்சித் தலைவர் இயக்கத்தை மீட்டெடுத்து தீய சக்தி திமுகவை வீழ்த்த உண்மையான அம்மாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தும் வகையில் நானும் சகோதரர் ஓபிஎஸ்ஸும் இணைந்திருக்கிறோம்.

எங்களிடம் மனதளவில் பகை உணர்வு கிடையாது. எங்களுடைய ஒரே குறிக்கோள் உண்மையான அம்மாவின் தொண்டர்கள் கையிலே மீண்டும் புரட்சித்தலைவர் இயக்கத்தை ஒப்படைப்போம். ஓபிஎஸ்ஸை நம்பி இருட்டில் கூட கையை பிடித்து செல்ல முடியும். பழனிசாமி உடன் செல்ல முடியுமா? மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போல் இரு கட்சிகளும் செயல்படும். எடப்பாடி பழனிசாமி துரோகி எனில் திமுக எங்களுக்கு பொது எதிரி. சுயநலத்திற்காக ஈபிஎஸ் பக்கம் செல்கின்றனர். எங்களால் யாரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது” என்றார்.

இதன்பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், “சின்னம்மாவையும், டி.டி.வி.தினகரனையும் எப்போது சந்திப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தீர்கள். தற்போது டி.டி.வி. சாரை சந்தித்து இருக்கிறேன். சின்னம்மாவை சந்திக்க அவரிடம் தகவல் சொன்னோம். வெளியில் சென்றிருப்பதாக கூறினார்கள். வந்தவுடன் விரைவில் சந்திப்போம் என்று உறுதியாக கூறியிருக்கிறார்கள். அடுத்த மாநாடு குறித்த உங்களுடைய (செய்தியாளர்கள்) சிந்தனை, செயல், உங்களது நல்ல நோக்கம் நிறைவேறும்.

அனைவரும் இணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் தமிழக மக்களும் விருப்புகிறார்கள். அந்த நோக்கத்தை நோக்கி தான் நாங்கள் செல்கிறோம். முதல் கட்டமாக தினகரனுடன் சந்திப்பு நடந்து இருக்கிறது. இனி ஒவ்வொரு சந்திப்பும் தொண்டர்களை இணைத்து அதிமுகவை புதுப்பொலிப்போடு நிலை நிறுத்துவோம். குறிப்பிட்டவர்களை தவிர அதிமுகவில் யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது சுயநலம். எங்களுடைய நோக்கம் அனைத்து தொண்டர்களையும் இணைத்து அதிமுகவை அம்மா, புரட்சித்தலைவர் காட்டிய அறவழியில் செல்வோம். சபரீசன் உடனான சந்திப்பு தற்செயலானது. மரியாதை நிமித்தமானது. மனிதருக்கு மனிதர் மரியாதை கொடுக்கும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது” என்றார்.