ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி – அதிபர் மாளிகை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

Scroll Down To Discover
Spread the love

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயன்றதாக ரஷிய அதிபர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளினைக் குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது என ரஷியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் மாளிகை மீது 2 டிரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. அந்த 2 டிரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அதிபர் மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. டிரோன் தாக்குதல் முயற்சி நடந்த சமயத்தில் புதின் அதிபர் மாளிகையில் இல்லை.

அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள ரஷியா, இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.