சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் உயிரிழப்பு..!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி ரோடு பூலாவூரணியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 30-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை ஆலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

அங்குள்ள ஒரு அறையில் தரை சக்கரம் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இதில் இடையன்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 32), தங்கவேல் (55), கருப்பம்மாள் (50) உள்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். மதியம் பட்டாசு தயாரிப்புக்காக மருந்து கலவை தயார் செய்யப்பட்டது. அப்போது திடீரென மருந்துகள் உரசி தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் சிறிது நேரத்தில் அந்த அறை மற்றும் அருகில் இருந்த மற்றொரு அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த கருப்பசாமி, தங்கவேல் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த கருப்பம்மாள் உள்பட 2 பேரை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.