40 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊழல் வழக்கு – கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கைது..!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடகாவில்ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக – எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா இன்று கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் தாவணகெரே மாவட்டம், சன்னகிரி சட்டசபை தொகுதி பாஜக எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் மாடால் விருபாக் ஷப்பா. இவர், கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவராகவும் பதவி வகித்தார். இந்நிறுவனத்தில் தான், பிரசித்தி பெற்ற மைசூர் சாண்டல் சோப் தயாரிக்கப்படுகிறது.

இவரது மகன் பிரசாந்த் மாடால், 45, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைமை கணக்காளராக உள்ளார். தந்தை தலைவராக இருக்கும் சோப் நிறுவனத்துக்கு ரசாயனம் சப்ளை செய்யும் ஒப்பந்தம் வழங்க, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் 81 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, ‘டீல்’ பேசியுள்ளார்.முதல் கட்டமாக, 40 லட்சம் ரூபாய் வழங்குவதாக, அந்த ஒப்பந்ததாரர் தெரிவித்தார். கடந்த மார்ச்02-ம் தேதியன்று பெங்களூருவில் எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான அலுவலகத்தில் ரூ. 40 லட்சத்தை கொடுத்த போது, அதை வாங்கிய பிரசாந்தை, லோக் ஆயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.

இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக பாஜக எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பாவை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர். இடைக்காலஜாமின் கோரி கர்நாடகா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதையடுத்து அவர் கைதானார்.

முன்னதாக எம்.எல்.ஏ.,வின் சஞ்சய்நகர் வீட்டில் நடத்திய ரெய்டில் 6 கோடியே 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. மேலும், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் இருந்தன. இவை அனைத்தும் கணக்கில் காட்டப்படாதவை என்பதால், லோக் ஆயுக்தா போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பணத்தை ஏழு பைகளில் நிரப்பி எடுத்து சென்றனர். நகையின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.